Monday, March 06, 2006

குதம்பைச் சித்தர் பாடல்கள் # 1

என் தந்தை அடிகடி மேற்கோள் காட்டும் பாடல்களில் ஒன்று "குதம்பைச் சித்தர் பாடல்".

குதம்பை சித்தர், மக்களுக்கு சொல்லும் கருத்தை குதம்பை என்ற ஒரு பெண்ணுக்கு சொல்வது போல் தம் பாடலில் சொல்கிறார்.

குதம்பை சித்தர், சித்தர்களின் பன்பிற்க்கு சற்றும் மாறாதவர் என்று தான் சொல்ல வேண்டும்.

32 பாடல்களை கொண்ட இவரது அனைத்து பாடல்களும் பாட எளியவை. முதல் 16 பாடல்களை இங்கும்,

அடுத்த 16 பாடல்களை அடுத்த பதிவில் காணலாம்.

இப்போது அவரது பாடலை பார்க்கலாம்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1

கண்டதை மட்டும் உண்மை என்று இருப்போர்க்கு அத்தாட்சி எதற்க்கு?
இதன் மூலம் கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் என்கிறார் மேலும் உண்மையை அறியும் வாய்ப்புகள் இருந்தாலும் கேட்பதில்லை..

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2

இவ்வுடலால் பெற்ற பொருள் கொண்டு இன்பமுரும் மனிதருக்கு கேட்டதை தரும் கற்பகங்கள் எதற்க்கு?

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3

காண்பதை கூட காணமல் கருத்தில் சிக்கியிருப்போர்க்கு வீணான ஆசை எதற்க்கு,அது (அவ்வுடலின் உயிர்) இருந்தென்ன போயென்ன?

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4

வஞ்சகமில்லாத வழியான சிவபதத்தை கண்டோர்க்கு சஞ்சலம் தான் சஞ்சலத்தில் விழும்!

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5

அனைத்திற்க்கும் ஆதாராமான, எவருகும் எட்டாத அச்சிவனின் அடியையும் முடியையும் கண்டவர் சப்தநாடிகளும் ஒடுங்கி நிற்பர், எவ்விதமான வாத பிரதி வாதங்களும் அங்கு இடம் காணாது.

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6

எப்போதும் ஊன் உரக்கமில்லாமல் சிவநினைவோடு இருப்போர்க்கு அச்சாரம் தேவை இருக்காது.

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7

பூதநாதனின் தந்திரங்கள் நிறைந்த சன்னிதியில் இருப்போர்க்கு, அவன் நாம நினைவை தவிர மந்திரங்கள் கூட தேவை இருக்காது.

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8

உண்மையான தவத்தில் இருப்போற்க்கு, உயர்வு என்ற போதைக்கு அடிமை ஆவதில்லை.


நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

ஆவுடை நாதனின் நடுவில் இருக்கும் லிங்க சொருபத்தில் நாட்டம் கொண்டோர்க்கு துக்கம், சோர்வு, போன்ற எதிர்மரை விளைவுகள் வருவதில்லை.

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10

மெய்ஞானிகள் தாம் பேசுவதையே இறைவன் கேட்க வேண்டும் என்று எண்ணுபவரல்லர் ஆகவே அவர்களுக்கு பேச்சு என்னும் சத்தங்களின் தேவை இருக்காது.

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

வாயுவை உயர்த்தி தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்டகோடியை கண்டவர்களுக்கு இவுலகின்பகளின் தேவைஇருக்காது.

வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12

துக்கமே வாழ்க்கையை நெறிபடுத்தும், அந்த துக்கதிலும், பிற இன்பத்திலும் வெளியொளியான அடியை கண்டோர்க்கு மோகம் நிறைந்த, சிற்றின்ப ஏகாந்த நினைவின் தேவைஇருக்காது

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

இறப்பை போக்கும் சிவ வழியைவிட்டு, தம் தனிவழி சென்றோர்க்கு இனியதிலும் இனியதான பேரானந்த ஏகாந்தமிருக்காது.

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14

வேற்றுமை அந்தரங்கத்தில் உழழும் மூடர்கள், சிவதந்திர நினைவில் வரமாட்டர்.

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15

ஆனந்த தாண்டவ நாதனை எப்போதும் நினைவில் கொன்டோர்க்கு உலகஞானமெதற்க்கு?

சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16

நாதன் தாள் கூடத்தை அனுதினம் துதிப்போற்க்கு, பத்திர பட்டயமெதற்க்கு.

4 comments:

Prakash M Vedhathiri said...

wow nice.... please update more siddha songsssssssssssssssssss

Prakash M Vedhathiri said...

wow nice.... please update more siddha songsssssssssssssssssss

KARTHIKEYAN said...

can you please attach font for the attached tamil words

TAMIL said...

பாடல்களை கேட்க்கும் படி இருந்தல் மிக நன்று